தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி 17 நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உண்ணாநிலையுடன் தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவதால், தனது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று தான் உண்ணாநிலையை மேற்கொள்வதாக சிவந்தன் கூறினார்.
நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடக்க 11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தன், இன்று 8 பேர் இணைந்து நடக்க தனது நடை பயணத்தைத் தொடருகின்றார். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர்.
நேற்றைய 40 கிலோமீற்றர் தூர நடை பயணத்தில் சிவந்தனுடன் 14 வயதுச் சிறுமி ஒருவர் 40கிலோமீற்றர் தூரமும் நடந்து சென்றிருந்த அதேவேளை, சிவந்தனுக்கு துணையாகச் செல்லும் இலக்கியன், பொஸ்கோ, ஹரி, வினோத், தினேஸ், ராஜ் போன்றவர்களும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்லுகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா முன்றலை) சிவந்தன் சென்றடைந்ததும், அங்கு இறுதிநாள் எழுச்சிக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும் எனவும், இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை முருகதாசன் திடலில்பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்
ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள்